கோவையில் குட்டி காவலர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவையில் குட்டி காவலர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக சாலைவிபத்துகள் நடக்கின்றன. எனவே, சாலை விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உயிர் அமைப்பு, அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், பள்ளி மாணவர்களைக் கொண்ட 'குட்டி காவலர்' எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை அரசுடன் இணைந்து தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த திட்டத்தின்படி பள்ளி மாணவர்களுக்கு சாலை விபத்தால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகள் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.
மேலும், 'தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவோம், அதிவேகமாக வாகனத்தை இயக்க மாட்டோம், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசமாட்டோம்' என சாலை பாதுகாப்பு உறுதிமொழியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் வாசிக்க அதனை பள்ளி மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.