உதகையில் ரூ.119 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


உதகையில் ரூ.119 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

உதகை நகரின் 200வது ஆண்டு விழாவையொட்டி, ரூ.119 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஊட்டி,

ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் முக்கோண சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ஊட்டியின் முதல் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் சிலையை இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த ஊட்டி 200-வது ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் நீலகிரி மாவட்டத்தில் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் மாவட்டத்தில் ரூ.56 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 28 முடிவுற்ற பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து 9,500 பயனாளிகளுக்கு, ரூ.28 கோடியே 13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இன்று நடந்த விழாவில் மட்டும் மொத்தம் ரூ.118 கோடியே 79 லட்சம் மதிப்பிலான அரசு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் ஆ.ராசா எம்.பி., அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து விழாவில் பேரூரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இயற்கை எழில் கொஞ்சும் உதகை பல்வேறு சிறப்புகளை கொண்டது. பழங்குடியின மக்களின் வரவேற்பு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. தெப்பக்காடு யானைகள் முகாமில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கப்படும்.

வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்நிய களை தாவரங்களை அகற்றும் பணிக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளை பாதுகாக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்

மக்களின் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஆ.ராசா குரல் கொடுக்கிறார். நீலகிரி மாவட்டத்திற்கே ராஜாவாக மக்களின் தேவைகளை அறிந்து ஆ.ராசா செயல்படுகிறார். நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொடுத்துள்ளது" என்று அவர் கூறினார்.


Next Story