மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
x

மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

திருவண்ணாமலை

மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைகட்டுவோம் என்று கடந்தமுறை ஆட்சியில் இருந்த பா.ஜக.வினர் நிலைப்பாட்டை எடுத்தனர். தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள காங்கிரசும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இதற்கு அம்மாநில பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர் முதல் மந்திரி, துணை முதல்-மந்திரி இருவரையும் சந்தித்து, இதற்கான தடை ஆணையை உடனடியாக வாங்க வேண்டும். துணை முதல் மந்திரி சிவக்குமார் கூறுகிறார், யார் தடுத்தாலும் உறுதியாக வரும் என்கிறார்.

ஏற்கனவே தமிழகம் பாலைவனமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் மேலும் தமிழகம் பாலைவனமாக மாறும். இதற்கு உரிய நடவடிக்கை மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைக் காக்க வேண்டியது அவருடைய பொறுப்பு.

தேர்தல் கூட்டணி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆனதாக கூறுகிறார். எத்தனை நிறுவனங்கள் வரப்போகிறது, எத்தனை இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என்றும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அவர்களுக்கானதா அல்லது மக்களுக்கானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து தற்போது தெரிவிக்க முடியாது. இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. எங்கள் கட்சி தொடர்பான பணியை நாங்கள் மேற்கொள்கிறோம். அதன் பின்னர் யாருடன் கூட்டணி என்று தலைவர் மூலம் அறிவிக்கப்படும்.

இந்தமுறை தேர்தலில் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக உள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக அந்த நிறுவனம் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்

இனிவரும் காலங்களில் கடமையை செய்யும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அதிகாரிகளை பணி செய்யவிடாமல் அரசு தடுக்கிறது. அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தான் திராவிட மாடல். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அமைச்சர் செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரையும் கைது செய்தால் ஆட்சியில் இருக்கும் மற்ற அமைச்சர்களுக்கு பயம் வரும். நியாயமும் மக்களுக்கு கிடைக்கும்.

கட்சியின் தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். பேசுவதிலும், நடப்பதிலும் சிறு தடுமாற்றம் உள்ளது. மற்றபடி அவர் பூரண நலமுடன் உள்ளார். விரைவில் அவரை சந்திக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story