அவ்வையார் விருதுக்கு தேர்வான எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


அவ்வையார் விருதுக்கு தேர்வான எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

2024-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது முன்னணி எழுத்தாளரான பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2012-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவ்வையார் விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்டினா சூசைராஜுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் அவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதைப் பெறுகிறார்.

மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்துநடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!" என்று தெரிவித்து உள்ளார்.



Next Story