நீரஜ் சோப்ராவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!


நீரஜ் சோப்ராவுக்கு  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!
x

உலக தடகள ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், உலக தடகள ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில்,

'நீரஜ்சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதி உள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் ஆனதற்கு வாழ்த்துகள். மிகப் பெரிய மேடையில் அவர் சாதித்து வருவது குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது'. என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story