கல்வி குறித்து விழிப்புணர்வு: சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காவல்துறையின் பணி, நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு என சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்திற்கு “தினத்தந்தி செய்தித்தாள் மேற்கோள் காட்டி” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் குழந்தைகளின் கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக மக்களால் வரவேற்பை பெற்றது.
கல்வி தான் இந்த உலகின் ஆகச்சிறந்த சொத்து என்பதை உணர்ந்த தமிழகத்தின் தலைவர்கள், போட்டி போட்டுக்கொண்டு படிக்க வைப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்தினார்கள் . ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்று தொடங்கி, சத்துணவு, சத்துணவில் முட்டை, அங்கன்வாடி திட்டம், இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கு சைக்கிள், சீருடைகள், லேப்டாப், காலை உணவு, மாணவிகளுக்கு மாதம் உதவி தொகை வரை கல்விக்காக திட்டங்கள் திட்டினார்கள். இதன் விளைவாக தமிழகம் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக மாறியது.
இந்நிலையில் இன்றும் சிலர் படிக்க வைக்க விரும்பாமல் குழந்தைகளை வீட்டிலேயே வைத்துக்கொள்வது எங்காவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படிப்பட்ட மாணவர்களை தேடிக்கண்டுபிடித்து படிக்க வைக்க தஅரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பென்னலூர்பேட்டை அருகே உள்ள பழங்குடியினர் வசிக்கும் திடீர் நகர் பகுதிக்கு நேற்று சென்ற, பென்னலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து அம்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்
அந்த வீடியோவில் எஸ்ஐ பரமசிவம் பேசுகையில், , "யாருக்காக உதவி தேவைப்பட்டால் என்னை காவல் நிலையத்தில் பார்க்கலாம். 24 மணி நேரமும் காவல் நிலையம் உங்களுக்காக திறந்தே இருக்கும். பள்ளி கட்டணம், சாப்பாடு என எந்த உதவிக்கும் என்னை தயங்காமல் கேளுங்கள். உங்களது கையெடுத்துக் கேட்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.
5 நாட்கள் பள்ளிகளில் முட்டையும், 2 நாட்களுக்கு பயறும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க, யார் காலில் விழுந்தாவது உதவி செய்கிறேன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் தான் பெரிய குற்றவாளி. குழந்தைகள் விஷயத்தில் நான் விடமாட்டேன். குழந்தைகளுக்கு கல்வி தர மறுப்பது, அவர்களுக்கு விஷம் கொடுப்பது மாதிரி, சமுதாயத்தை கருவறுப்பது மாதிரி. தப்பான மூட நம்பிக்கையால் மாட்டிக்காதீங்க" என்று உருக்கமாக எஸ்ஐ பரமசிவம் பேசினார்.
இந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்த பொதுமக்கள் பலரும் காவல் உதவியாளர் பரமசிவத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களும் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் தினத்தந்தி செய்தித்தாளில் வெளியான செய்தியை படித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எஸ்ஐ பரமசிவத்தை வாழ்த்தி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
"காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்." என்று கூறியுள்ளார்.