மகளிர் காவலர்கள் பொன்விழா: 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில், 9 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை,
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து 50 ஆண்டுகள் தொட்டுள்ள பொன்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த விழாவில் டி.ஜி.பி., காவல் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
பெண் போலீசின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் போலீசாரால் நடத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதை, சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் பெண் போலீசார் நிகழ்த்திக் காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் அவள் திட்டத்தை முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவையொட்டி சிறப்பு தபால் தலையையும் முதல்-அமைச்சர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னான 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
▶️ பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்:
▪️ ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம்
▪️ பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி
▪️ காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை
▪️ காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும்
▪️ கலைஞர் காவல் கோப்பை விருது
▪️ குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல்
▪️ பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள்
▪️ ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு
▪️ பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.