பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாடு...! விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தினத்தந்தி 15 Aug 2022 11:27 AM IST (Updated: 15 Aug 2022 5:17 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாடு...! விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.

காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் 2-வது ஆண்டாக தேசியக்கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் பல்வேறு தரப்பினருக்கு விருதுகளையும் வழங்கி கவுரவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். விருதுடன் அளித்த ரூ.10 லட்சத்துடன் ரூ.5,000-ம் சேர்த்து முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கினார்.


இந்த ஆண்டு வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நாகை கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் பின்புறம் மேலவீதி அடுத்த கவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது இந்த குளம்.

இந்த குளத்தின் கரையில் அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு குழந்தை குளத்தில் உள்ள பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி குளத்தில் தவறி விழுந்தது. அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றது.

அப்போது அந்த குழந்தையும் குளத்தில் விழுந்தது. இரு குழந்தைகளும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த எழிலரசி என்பவர் உடனடியாக குளத்தில் இறங்கி இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முயன்று அவரும் குளத்தில் விழுந்தார்.

இருப்பினும் குழந்தைகளை பத்திரமாக மீட்டார். தனது உயிரை துச்சமென நினைத்து குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். மேலும் குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நாகை கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசிக்கு வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்கள், அரசுத் துறைகள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவனங்களுக்கு நல் ஆளுமை விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

அதன்படி செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை மீட்டு தொழில் முனைவோராக மாற்றியதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கும் , திருநங்கைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்த செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கும், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை சிறப்பாக உருவாக்கிய திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

நீர் நிலைகளை மீட்டு எடுத்த அப்போதைய சிவகங்கை மாவட்ட கலெக்டருக்கும், பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்த திருநெல்வேலி மாவட்ட கலெக்டருக்கும், வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலி வழியாக வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்திய தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளருக்கும், சென்னையில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோரை மீட்டு பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல் துறை ஆணையாளருக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டன.

சிறந்த மாவட்ட கலெக்டர்களாக தினேஷ் பொன்ராஜ், அருண் தம்புராஜ் தேர்வாகி உள்ளனர். சிறந்த மருத்துவராக உதகையை சேர்ந்த ஜெய் கணேஷ் மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனமான புதுக்கோட்டையில் உள்ள ரெனோசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த சமூகப் பணியாளராக மதுரையை சேர்ந்த அமுத சாந்தி தேர்வாகி உள்ளார். மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனம் என டாபே ஜெ ரிஹாப் சென்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.




தமிழ்நாடு அரசு சார்பில் அப்துல் கலாம் விருது பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரான முனைவர் ச.இஞ்ஞாசிமுத்துவுக்கும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணியாற்றிய அமுத சாந்திக்கு சிறந்த சமூக பணியாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் விருது லட்சுமி பிரியாவுக்கு வழங்கப்பட்டது.

மகளிர் நலத்திற்காக சிறந்த சேவைக்கு தொண்டாற்றிய வானவில் அறக்கட்டளைக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முதல்-அமைச்சரின் இளைஞர் விருது, விஜயகுமார், முகமது ஆசிக் வேலூ ஸ்ரீகாந்த், நாகையை சேர்ந்த சிவாஞ்சனி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரூ.15 லட்சம் பரிசு

2வது சிறந்த நகராட்சியான குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு

3வது சிறந்த நகராட்சியான தென்காசி நகராட்சிக்குரூ.5 லட்சம் பரிசு வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


Next Story