அரிவாள் வெட்டில் காயமடைந்த பிளஸ்-2 மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்


அரிவாள் வெட்டில் காயமடைந்த பிளஸ்-2 மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

திருநெல்வேலி

நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் காயமடைந்த பிளஸ்-2 மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைசச்ர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவர் செல்போன் மூலம் மாணவரின் தாயாரிடம் பேசியபோது, 'அரசு எப்போதும் உங்களுடன் இருக்கும்' என்று உறுதி அளித்தார்.

அண்ணன்-தங்கைக்கு அரிவாள் வெட்டு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, தங்கை சந்திரா செல்வி ஆகியோரை மாணவர்கள் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று, மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

அப்போது சின்னத்துரையின் தாயார் அம்பிகாவிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ''தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும். குழந்தைகளின் படிப்பு தடைபடாத வண்ணம் அனைத்து உதவிகளும் அரசு செய்யும். அரசு எப்போதும் உங்களுடன் இருக்கும்'' என்று ஆறுதல் தெரிவித்தார்.பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவாரணத்தொகை

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். பாதிக்கப்பட்ட இருவருக்கும் முதல்-அமைச்சர் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் தேறி வருகிறார்கள்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட 2 பேருக்கும் முதற்கட்ட நிவாரணத்தொகை உடனடியாக வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும். அண்ணன்-தங்கை மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தாத்தாவின் குடும்பத்தினருக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பாளையங்கோட்டை பள்ளிக்கு மாற்றம்

காயமடைந்த மாணவர்களின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் அவர்களது கல்வி அவசியம் கருதி, அவர்கள் 2 பேரையும் பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேரி சார்ஜன்ட் மேல்நிலைப்பள்ளியில் விடுதி வசதியுடன் தங்கி இருந்து படிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இனிமேல் இது போன்று சம்பவம் நடக்காமல் தடுக்க வட்டார வாரியாக சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. ரூ.2 லட்சம் நிதி

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசு, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story