விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்ட முதல்-அமைச்சர் தயாராக இருக்கிறார் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்ட முதல்-அமைச்சர் தயாராக இருக்கிறார் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழிற்பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ.) பயிற்சியாளர்களுக்கு இடையிலான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா, சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று காலை நடந்தது.

விழாவுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று போட்டியை தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் மண்டல வாரியாக மாணவ-மாணவிகள் தந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

திறமை

இளைஞர்கள் நலமாக இருந்து திறமைகளை வளர்த்து கொண்டால்தான், தொழில் வாய்ப்புகளை பெற முடியும். இதுவரை மாவட்ட அளவில் மட்டுமே நடந்து வந்த இந்த விளையாட்டு போட்டிகள், முதன் முறையாக இன்று மாநில அளவில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தின் வளர்ச்சியில் தொழில்துறை முக்கிய பங்காற்றுகிறது.

'தியரி'யைத்தான் கல்லூரிகள் கற்றுத்தரும். ஆனால் திறன் சார்ந்த பயிற்சிகளை 'பிராக்டிகலாக' கற்றுத்தருவது ஐ.டி.ஐ. துறைதான். தமிழகத்தில் உள்ள 102 அரசு ஐ.டி.ஐ.க்களில் 2022-23-ம் கல்வி ஆண்டில் 92 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இது தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக படைக்கப்பட்டுள்ள சாதனையாகும். ஐ.டி.ஐ.க்களில் படிக்கும் மாணவ-மாணவிகளில் 76 சதவீதத்தினர் முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் வழிகாட்டுவார்

பள்ளி-கல்லூரிகளில் மட்டுமே இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடக்கும். ஆனால் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் இதுபோல போட்டிகள் நடத்தப்படுவது பாராட்டுக்குரிய விஷயம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், நாங்களும் உங்களுக்கு வழிகாட்ட தயாராகவே இருக்கிறோம். இந்த போட்டிகளில் பங்கேற்பதின் மூலம் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடுகளை பெற முடியும். உங்களில் சிறந்த வீரர்களை மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை நாங்கள் உருவாக்கித்தர தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தயாநிதி மாறன் எம்.பி.

விழாவில் தயாநிதி மாறன் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுதீன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் வீரராகவராவ் வரவேற்றார். கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

இன்றுடன் நிறைவு

கபடி, இறகுப்பந்து, கைப்பந்து, கேரம் உள்ளிட்ட 17 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.

இதில் 717 மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த விளையாட்டு போட்டி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.

'செல்பி' எடுத்த உதயநிதி

விளையாட்டு போட்டியை தொடங்கிவைத்த பின்னர், மாணவ-மாணவிகள் அமர்ந்த இடத்துக்கே உதயநிதி ஸ்டாலின் தேடிச்சென்று புகைப்படம் எடுத்தார்.

பின்னர் மாணவிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர்களில் சிலரது செல்போனை வாங்கி செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.

விழாவில் 7 மண்டலங்கள் பங்கேற்று நடத்திய அணிவகுப்பில் சிறந்த மண்டலமாக சென்னை தேர்வானது. அந்த அணிக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி கோப்பையை பரிசளித்தார்.


Next Story