காட்டூர் வீதியில் நடந்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


காட்டூர் வீதியில் நடந்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:45 AM IST (Updated: 20 Jun 2023 2:36 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருேக காட்டூர் வீதியில் நடந்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

திருவாரூர்

விழா முன்னேற்பாடு பணி

திருவாரூர் அருகே காட்டூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திருவாரூருக்கு வருகை தந்தார். பின்னர் அவர், சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கினார்.நேற்றுகாலை சன்னதி தெரு இல்லத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டம் சென்றார். அங்கு விழா முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர், காரில் புறப்பட்டு சன்னதி தெருவில் உள்ள இல்லத்திற்கு வந்தார்.

நினைவிடம்

அங்கு மதிய உணவு சாப்பிட்ட அவர் ஓய்வு எடுத்தார். பின்னர் மாலையில் மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர், அமைச்சர்களுடன் புறப்பட்டு காட்டூருக்கு சென்றார். தொடர்ந்து காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் நினைவு இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதையடுத்து நினைவு இடத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டூர் வீதியில் நடந்தே கலைஞர் கோட்டத்திற்கு வந்தார். அப்போது பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஓடி வந்து கைகுலுக்கி மகிழ்ந்தனர். மேலும் பொதுமக்கள் சிலர், மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

புகைப்படம்

உடனே அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த பெண்களின் செல்போனை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வாங்கி, அவர்களை மு.க.ஸ்டாலினுடன் நிற்கும்படி புகைப்படம் எடுத்து கொடுத்தார்.பின்னர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்ல வாசலில் நின்று கொண்டிருந்த முதியவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து வீதியில் நடந்து வந்தபோது சாலையின் இருபுறமும் நின்ற மக்களை பார்த்து கைஅசைத்தபடியும், கைகளை கூப்பியபடியும் வந்தார்.

கருணாநிதி சிலை

இதையடுத்து கலைஞர் கோட்டம் திறப்பு விழா பந்தலை பார்வையிடுவதற்காக சென்றார். துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் கலைஞர் கோட்டத்திற்குள் சென்று அங்குள்ள கருணாநிதி சிலை, புகைப்படங்களை பார்வையிட்டனர்.இதையடுத்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் காரில் புறப்பட்டு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்திற்கு வந்தனர். மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. பொருளாளர் டி. ஆர். பாலு எம்.பி.,, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, பெரியசாமி, தயாநிதிமாறன் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலர் சென்றனர்.முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்றுஇரவு காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தை பார்வையிட்டனர்.


Next Story