"மழைநீர் வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர்; முதல்-அமைச்சரின் தொகுதி கொளத்தூரிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது" - ஜெயக்குமார் பேட்டி
அண்ணன் தம்பி உறவு எல்லாம் 1972ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. திமுக தான் எங்கள் பகையாளி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை புளியந்தோப்பில் வீடு இடிந்த விபத்தில் பலியான பெண் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
சாந்தி மீது பால்கனி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தும் இரண்டு மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சாந்தியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். அவசர காலத்திற்கு கூட உதவ முடியாமல் தான் மருத்துவத்துறை உள்ளது.
மேயர், எம்.எல்.ஏ உட்பட யாரும் ஆறுதல் சொல்ல கூட வரவில்லை. 25 ஆயிரம் நிவாரணம் கொடுத்துள்ளேன். அரசு இதுவரை எதுவுமே செய்யவில்லை. மழை நீர் வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர். முதல்-அமைச்சரின் தொகுதியான கொளத்தூரிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடாத ஊடக நிறுவனங்களை திமுக அரசு மிரட்டுகிறது.
அதிமுகவை இயக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. பாஜகவுடன் தேர்தல் சமயத்தில் மட்டுமே கூட்டணி. திமுகவுடன் அண்ணன் தம்பி உறவு எல்லாம் 1972ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. திமுக தான் எங்கள் பகையாளி என்றார்.