கிராம, ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த முதல்-அமைச்சர் உத்தரவு


கிராம, ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த முதல்-அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டுதோறும் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு கிராம மற்றும் ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்

நலத்திட்ட உதவிகள்

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் 2 ஆயிரம் ஏழைகளுக்கு ரூ.1 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட கூவனூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர் எ.வ.குமரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக்குழுதலைவர் அஞ்சலாட்சிஅரசகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றியசெயலாளர் அய்யனார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு 2 ஆயிரம் ஏழைகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

தொலைநோக்கு சிந்தனையுடன்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் வசந்தம்கார்த்திகேயனும், உதயசூரியனும் பாடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் வளர்ச்சி பெறவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு வளர்ச்சிபணிகள் நடைபெற்று வருகிறது. அதையும் தாண்டி கிராமங்கள் சிறுநகரங்களாக மாறவேண்டும். அப்போதுதான் அந்தந்த பகுதிகளும் பொருளாதார ரீதியாக வளரும், அதன்மூலம் தனிநபர் வருமானமும் உயரும். இந்த அடிப்படையில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராம மற்றும் ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி

தி.மு.க. ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் இடையில் 10 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் சிந்தனை எல்லாம் கிராமங்களையும், அங்குள்ள விவசாயிகளையும் தரம் உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மக்களை தேடிமருத்துவம், இல்லம்தேடி கல்வி என எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற திராவிடமாடல் ஆட்சியை நடத்தி எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை கிராமத்தை நோக்கியே செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்டசெயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., வசந்தம் க.வேலு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், பாரதி, பெருமாள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, துரைராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுதலைவர் புவனேஸ்வரிபெருமாள், துணை தலைவர் வக்கீல் தங்கம், இந்துசமய அறநிலைய துறை தலைவர் வக்கீல் பாலாஜிபூபதி, ரிஷிவந்தியம் ஒன்றியக்குழுதலைவர் வடிவுக்கரசிசாமிசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story