திருவண்ணாமலை வந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு


திருவண்ணாமலைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கோலாகலமான முறையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கோலாகலமான முறையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இரவு 8.55 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்.

அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியான கீழ்பென்னாத்தூர் அருகே சோ.காட்டுக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நையாண்டி இசை, தாரை தப்பட்டை, கரகாட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் மூலம் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, அம்பேத்குமார், வசந்தம்கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் வரவேற்றனர்.

கீழ்பென்னாத்தூரில் இருந்து திருவண்ணாமலை வரை சோமாசிப்பாடி, சோமாசிப்பாடி புதூர், சமந்தனூர், திண்டிவனம் பைபாஸ் சாலை மேம்பாலம் அருகில், திருநேர்த்தி அம்மன் கோவில் அருகில், திருக்கோவிலூர் ரோடு ரவுண்டானா அருகில் மற்றும் வழியெங்கும் பல்வேறு இடங்களில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரதநாட்டியம்

அப்போது அந்த இடங்களில் செண்டை மேளம், கதக்களி நடனம், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் சாலை நெடுகிலும் கட்சியினர் நீண்ட வரிசையில் நின்று கட்சி கொடியை ஏந்திய படி முதல்- அமைச்சரை வரவேற்றனர்.

முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது மாவட்ட கலெக்டர் முருகேஷ் பூங்கொத்து கொடுத்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரி வரவேற்பு அளித்தனர். முதல்- அமைச்சர் சென்ற வழியெங்கும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்- அமைச்சர் வருகையால் திருவண்ணாமலை விழா கோலம் பூண்டு காணப்பட்டது.

இன்று

தொடந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தை முதல்- அமைச்சர் திறந்து வைத்து பார்வையிடுகின்றார். பின்னர் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறும் வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் முதல்- அமைச்சர் பங்கேற்கிறார்.

அதன் பின்னர் முதல்- அமைச்சர் திருவண்ணாமலை நகராட்சி பள்ளி எதிரில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. திருவண்ணாமலை நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன்- திருவண்ணாமலை நகர மன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன் ஆகியோரது மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றார்.


Next Story