கான்கிரீட் மூடி உடைந்ததில் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த சிறுவன் பலி
தாராபுரம் அருகே கான்கிரீட் மூடி உடைந்ததில் கழிவுநீர் தொட்டிக்குள் 2 சிறுவர்கள் விழுந்தனர். இதில் அண்ணன் பரிதாபமாக பலியான நிலையில் தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமாநில தொழிலாளி
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கந்தமாஜி (வயது 36). இவருக்கு மம்தா என்ற மனைவியும், ரம்யாமாஜி (3), ஆமியோ மாஜி (2) என்ற 2 மகன்களும் இருந்தனர்.
இவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொம்மநல்லூரில் உள்ள ஒரு காட்டன் மில்லில் வேலை பார்த்து கொண்டு அங்குள்ள ஊழியர்களின் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்தனர்.
நேற்று முன் தினம் காலையில் கந்தா மாஜி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவரது 2 மகன்களும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியின் மேல் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டியின் கான்கிரீட் மூடி உடைந்து இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து விட்டனர்.
சிறுவன் பலி
சத்தம் கேட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவர்கள் இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ரம்யா மாஜி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு சிறுவன் ஆமியோ மாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.