தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்த சம்பவம்: தந்தைக்கு நஷ்டஈடாக ரூ.7½ லட்சம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்த சம்பவம்: தந்தைக்கு நஷ்டஈடாக ரூ.7½ லட்சம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x

தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் தந்தைக்கு நஷ்டஈடாக ரூ.7½ லட்சம் வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர்

அறுவை சிகிச்சை

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 39). கடந்த 2010-ம் ஆண்டு இவருடைய ஒரு வயது குழந்தையான சந்தோசுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை ராஜா அணுகியுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்.

குழந்தை சாவு

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு குழந்தை சந்தோசுக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை செய்யும் முன்பு மயக்க மருந்து நிபுணர்களின் தவறான சிகிச்சையால், அதாவது மருந்தால் தூண்டப்பட்ட மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்ததை போலீசுக்கு தெரிவிக்காமலும், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமலும், குழந்தை இயற்கையாக இறந்துவிட்டது என்று கூறி, இயற்கை மரணம் என தவறான இறப்பு சான்றிதழ் கொடுத்து குழந்தையின் உடலை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி விட்டனர்.

சாவில் மர்மம் உள்ளதாக புகார்

இதை நம்பிய பெற்றோரும் உடலை பெற்று அடக்கம் செய்து விட்டனர். இந்த குழந்தை இயற்கையான இறப்பு என நகராட்சியும் சான்றிதழ் கொடுத்துள்ளது. பின்னர் சிறிய அறுவை சிகிச்சை என்பதால் இயற்கையான மரணம் ஏற்பட வாய்ப்பில்லை, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்திருக்கும் என சந்தேகமடைந்த குழந்தையின் தந்தை ராஜா, தனது குழந்தை சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து வழக்குப்பதிந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து பிரேத பரிசோதனை செய்ய பெரம்பலூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். ஆனால் பெரம்பலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கொண்ட குழுவை அமைக்காமல் காலதாமதம் செய்தது.

நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

இதனால் உரிய டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து பிரேத பரிசோதனை செய்ய பெரம்பலூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜா வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படி குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கையில், உடல் அழுகியதால் இறப்பிற்கான முழுமையாக காரணம் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜா தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெற்றுத்தரக்கோரி கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி வக்கீல் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இழப்பீடு வழங்க உத்தரவு

இந்த வழக்கை கோர்ட்டு தலைவரும், நீதிபதியுமான ஜவஹர் மற்றும் கோர்ட்டு உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, தவறான மருத்துவ சிகிச்சையால் தான் குழந்தை இறந்தது என கண்டறியப்பட்டதால் குழந்தையின் தந்தைக்கு நஷ்டஈடாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், மருத்துவம் மற்றும் இதர செலவுக்ககாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் தொகையை மருத்துவமனை நிர்வாகம் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும், இல்லையென்றால் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியில் இருந்து 9 சதவீத வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story