"தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது" - அமைச்சர் கீதாஜீவன்


தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது - அமைச்சர் கீதாஜீவன்
x

“தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது” என்று நெல்லையில் அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை (போக்சோ) வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கான மண்டல அளவில் திறன் வளர்ப்பு பயிற்சி நேற்று நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் அமர்குஷ்வாகா, கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். போக்சோ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள், செயல்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், வழக்கு விவரங்கள் குறித்து துணை இயக்குனர் செந்தில்குமார் பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 2,127 பேருக்கு ரூ.35 கோடி இடைக்கால நிவாரணம் மற்றும் இறுதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம், பாதுகாப்பு இல்லங்களில் இருக்கும்போதே 2 நாட்களுக்குள் மருத்துவ பரிசோதனை, போலீஸ் விசாரணை உள்ளிட்ட அனைத்தையும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. போக்சோ வழக்குகள் மீது நீதிமன்றத்தில் தண்டனைகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது. குழந்தைகள் திருமணத்தை விட, சிறார்கள் காதலித்து செய்யும் திருமணங்கள் தான் அதிகமாக உள்ளது. இதுகுறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இருவரும் விரும்பி திருமணம் செய்வதால் போக்சோ வழக்குகளில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. மகளிர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறார் திருமண வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story