பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய்
உடுமலை அருகே பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொடடியில் மூழ்கடித்து கொலை செய்த தாயை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
உடுமலை அருகே பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொடடியில் மூழ்கடித்து கொலை செய்த தாயை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம் பெண்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தீபாலபட்டியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 28). இவருக்கும் வசந்தி (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அப்போது வசந்திக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு சிறிது காலம் அவருடன் குடும்பம் நடத்தினார். பின்னர் 2-வது கணவரை விட்டு பிரிந்து மீண்டும் முதல் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இதனால் வசந்தி கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றார். அந்த குழந்தை பிறந்து 35 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் நேற்று வசந்தி குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டதாக தெரிகிறது.
குழந்தை இறந்ததாக நாடகம்
அதை மறைப்பதற்காக குழந்தை தொட்டியில் கை தவறி விழுந்து விட்டது என்று நாடகம் ஆடினார். பின்னர் குழந்தையை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீசார் வசந்தியை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்ததை வசந்தி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்து 35 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.