நீர்நிலைகளுக்கு அருகில் குழந்தைகளை அனுப்பக்கூடாது
நீர்நிலைகளுக்கு அருகில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நீர்நிலைகளுக்கு அருகில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கோடை மழை
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோடை விடுமுறையில் மாணவ-மாணவிகள் எவ்வித பாதுகாப்புமின்றி கல் குவாரிகள் மற்றும் நீர் நிரம்பிய குட்டைகளிலோ அல்லது அதன் அருகிலோ செல்வதை தடுக்க வேண்டும். மேலும் குளிக்க அனுமதிக்க கூடாது.
மின்னல் தாக்குதல்
இடி மற்றும் மின்னலின் போது பொதுமக்கள் வெட்ட வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். முற்றிலும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மழை பெய்யும் போது, இடி, மின்னல் நேரங்களில் பொதுமக்கள் செல்போன் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்தக் கூடாது. மின்னல் ஏற்படும் போது கால்நடைகளை மரத்தடியில் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
உயர் மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் 50 அடி தூரத்தில் இருப்பது நல்லது. மின்னல் ஏற்படும்போது உலோக பொருள்களை வெட்ட வெளியில் பயன்படுத்தக் கூடாது. சிறிய அளவு மின்சாரத்தை உணர்ந்தாலோ, உடலில் உள்ள ரோமங்கள் சிலிர்த்தாலோ அல்லது உடல் கூச்சம் ஏற்படுதல் போன்றவை மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகள் ஆகும்.
பாதுகாப்பு விதிமுறைகள்
அந்த சமயம் உடனடியாக தரையில் அமர்ந்து விட வேண்டும்.
மேலும் இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலிகளையும் கண்டு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.