கடித்த பாம்புகளுடன் சிகிச்சைக்கு வந்த சிறுவர்கள்


கடித்த பாம்புகளுடன் சிகிச்சைக்கு வந்த சிறுவர்கள்
x
தினத்தந்தி 11 Sept 2023 5:15 AM IST (Updated: 11 Sept 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடித்த பாம்புகளுடன் சிகிச்சைக்கு வந்த சிறுவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவில் வெப்பம் விலகி குளிர் நிலவுகிறது. இது மனிதர்களை மட்டுமின்றி பாம்புகளையும் வாட்டுவதை போன்று தோன்றுகிறது. மழையால் புதர்களின் வாழும் பாம்புகள், குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டது. இதன் காரணமாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தினமும் சராசரியாக 10-க்கும் மேற்பட்டோர் பாம்பு கடி சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல், குட்டியபட்டி, சீலப்பாடி, முள்ளிபாடி, தாமரைப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 பேர் பாம்புகடிக்கு சிகிச்சை பெற வந்தனர். அதில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த உதயகுமார் (வயது 16), குட்டியபட்டியை சேர்ந்த முகேஷ்குமார் (14) ஆகியோர் தங்களை கடித்த பாம்புடன், ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

இருவரும் தங்களை படித்த பாம்புகளை நண்பர்கள் உதவியுடன் அடித்து கொண்டு வந்தனர். பாம்பை காண்பித்தால் டாக்டர் உரிய சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும் என்று கொண்டு வந்ததாக கூறினர். அதேபோல் நேற்று முன்தினமும் ஒருவர் தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக வந்தது குறிப்பிடத்தக்கது. பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வருபவர்கள், தங்களை கடித்த பாம்புடன் வரும் சம்பவங்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களை கலங்க வைத்துள்ளது.


Next Story