மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருள்கின்றனர். பின்னர் 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதை தொடர்ந்து கோவில் யானை லட்சுமியும் செல்ல பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்ல உள்ளனர். இதற்காக மலைக்கோட்டை சுற்றி உள்ள 4 வீதிகளிலும் தேர் செல்ல ஏதுவாக சாலைகளில் இருந்த பள்ளம், மேட்டை சீர்செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
----






