குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி


குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி
x
தினத்தந்தி 3 April 2023 12:30 AM IST (Updated: 3 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தவக்காலத்தையொட்டி, குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.

திண்டுக்கல்

குருத்தோலை ஞாயிறு

இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தவக்காலம், கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது.

தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான நேற்று குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, இந்த நாளில் இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தபோது மக்கள் ஆலிவ் மரக்கிளைகளை கையில் ஏந்தி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததாக பைபிளில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர் பவனி

அதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி, திண்டுக்கல்லில், ஐக்கிய கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் குருத்தோலை பவனி மற்றும் தொடக்க ஜெப கூட்டம் திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் நேற்று நடந்தது.

இதையொட்டி நடைபெற்ற ஜெப கூட்டத்துக்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார். அதன்பிறகு குருத்தோலையை அர்ச்சித்தார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலய தலைமை பாதிரியார் ஸ்டான்லி ஜெயராஜ் தொடக்க ஜெபம் செய்தார். திண்டுக்கல் டி.இ. எல்.சி. திரித்துவநாதர் தேவாலய போதகர் அருள் எம்.செல்வராஜ் நற்செய்தி வாசகத்தை வாசித்தார். அதன்பிறகு குருத்தோலை பவனி தொடங்கியது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கைகளில் குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடல்களைப் பாடி திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்தனர். பின்னர் அந்தந்த தேவாலயத்தை பவனி சென்றடைந்தது. அதன்பிறகு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை ஆலயங்களில் நடந்தது.

இதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தின் அனைத்து பங்கு தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது.

கொடைக்கானல்

இதேபோல் கொடைக்கானல் பழைய பஸ்நிலையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஒன்று கூடினர். அவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, 'ஓ சன்னா' பாடலை பாடியபடி பவனியாக சென்றனர். மூஞ்சிக்கல் திரு இருதய ஆலயத்தில் வட்டார அதிபர் ஜான் திரவியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புனித சலேத் அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தையர்கள் தேவராஜ், விசுவாசம், உகார்த்த நகர் ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டர் சகாயராஜ், செண்பகனூரில் உள்ள ஆலயத்தில் பங்குத்தந்தை அப்போலின் கிளாரட்ராஜ், நாயுடுபுரத்தில் உள்ள ஆலயத்தில் பங்குத்தந்தை அமுல்ராஜ் ஆகியோரும் சிறப்பு திருப்பலி நிகழ்த்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

செந்துறை

நத்தம் தாலுகா செந்துறையில் குருத்தோலை பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தையர் இன்னாசிமுத்து, உதவி பங்குத்தந்தையர்கள் பிரிட்டோ, மரிய பிரான்சிஸ் பிரிட்டோ, பிரான்சிஸ், நத்தம் புனித ராயப்பர் ஆலயத்தில் உதவி பங்குதந்தையர் ஜெரால்டு ஸ்டீபன்செல்வா, சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பாதிரியார் ஜான் பிரிட்டோ ஆகியோர் தலைமையில் சிறப்பு பிராத்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story