குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி


குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி
x

பெரம்பலூர் மாவட்டத்தில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.

பெரம்பலூர்

குருத்தோலை ஞாயிறு

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல் உபவாசம் கடைபிடித்து 40 நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை பெரம்பலூரில் ரோவர் வளைவு அருகே உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலத்தில், அந்த திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும், புனித பனிமய மாதா திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும், ஆத்தூர் சாலையில் சி.எஸ்.ஐ. திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் ஒன்றாக கூடினர்.

பவனியாக சென்றனர்

பின்னர் அவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு பவனியாக ஒன்றாக சென்றனர். அப்போது சங்குப்பேட்டையை தாண்டி சென்றபோது புனித பனிமய மாதா திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவா்கள் பிரிந்து அவர்களது திருத்தலத்திற்கு பவனியாக சென்றனர். காமராஜர் வளைவில் சி.எஸ்.ஐ. திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பிரிந்து அவர்களது திருத்தலத்திற்கு பவனியாக சென்றனர்.

பின்னர் டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் தங்களது திருத்தலத்திற்கு வந்தடைந்தனர். இதையடுத்து அந்தந்த திருத்தலங்களில் குருத்தோலை சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ திருத்தலங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.

புனித வெள்ளி

மேலும் வருகிற 6-ந் தேதி பெரிய வியாழனன், 7-ந் தேதி புனித வெள்ளி, 8-ந் தேதி புனித சனி கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படவுள்ளது. 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பெரிய வியாழன்று கிறிஸ்தவ திருத்தலங்களில் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வு நடைபெறும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியன்று சிலுவை பாதை ஊர்வலம் நடைபெறும். புனித சனியன்று இரவு பாஸ்கா திருப்பலி நடைபெறும். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.


Next Story