குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி
புதுக்கோட்டையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி சென்றனர்.
குருத்தோலை ஞாயிறு
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. இந்த தவக்காலம் வருகிற 9-ந் தேதி வரை 40 நாட்கள் நடைபெறுகிறது. இந்தநிலையில் நேற்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு மாவட்ட பகுதிகளில் குருத்தோலை பவனி நடைபெற்றது. அதன்படி புதுக்கோட்டையில் நேற்று கிறிஸ்தவ மக்கள் கையில் குருத்தோலையை ஏந்தி ஊா்வலமாக சென்றனர்.
திருமயம் பகுதியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் குருத்தோலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஏந்திய படி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று தேவாலயம் வந்து வழிபாடு நடத்தினர்.
சிறப்பு திருப்பலி
ஆலங்குடியில் உள்ள புனித அதிசய அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் ஜெருசலேம் நகரில் இயேசுகிறிஸ்து கழுதை மீது பவனியாக சென்றதின் அடையாளமாக கும்மங்குளம், வாழைக்கொல்லை, அய்யங்காடு, செம்பட்டிவிடுதி, வண்ணாச்சிக்கொல்லை, குளவாய்ப்பட்டி, பாத்தம்பட்டி, நெம்மக்கோட்டை பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி ஓசன்னா பாடல்களை பாடி பவனியாக சென்றனர். பின்னர் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
விராலிமலை புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயம் வந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.