குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் பவனி


குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் பவனி
x

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் பவனி வந்தனர்.

திருச்சி

கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வான தவக்காலம் கடந்த மாதம் 22-ந் தேதி சாம்பல் புதனன்று தொடங்கியது. இந்த தவக்காலம் வருகிற 9-ந் தேதி வரை 40 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு மாவட்ட பகுதிகளில் குருத்தோலை பவனி நடைபெற்றது. ஜெருசலேம் நகரில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமிகள் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து ஒலிவ மரக்கிளைகளை கையில் ஏந்தி தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பேரால் வருபவர் ஆசி பெற்றவர் என்று ஆர்ப்பரித்து கூறி பவனி வந்தனர். அதனை நினைவு கூறும் வகையில் நேற்று கிறிஸ்தவர்கள் குருத்ேதாலைகளுடன் பவனி வந்தனர்.

இதில் புள்ளம்பாடி வட்டாரத்தில் வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பேராலய அதிபர் தனிஷ்லாஸ், கல்லக்குடி தூய சவேரியார் ஆலய பங்குத்தந்தை சந்தியாகு, ஆலம்பாக்கம் புனித தோமையார் ஆலய பங்குத்தந்தை தொன்போஸ்கோ மற்றும் கல்லகம் புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளுடன் பவனி வந்து ஆலயத்தை அடைந்தனர். புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு சூசைமாணிக்கம், சகாயமாதா மருத்துவமனை இயக்குனர் அருட்தந்தை அல்போன்ஸ் தலைமையில் சகாயமாதா மருத்துவமனையில் குருத்தோலை ஞாயிறு பவனி தொடங்கியது. இதில் நர்சிங் பயிற்சி மாணவிகள், கிறிஸ்தவர்கள், அருட்சகோதரிகள் கையில் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் புனித அன்னாள் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதில் உதவி பங்குத்தந்தைகள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி கருமண்டபத்தில் உள்ள குணமளிக்கும் மாதா ஆலயம், ஜங்ஷன் பகுதியில் உள்ள தூயயோவான் தேவாலயம், மேலப்புதூர் மரியன்னை பேராலயம், குழந்தை யேசு தேவாலயம், புத்தூர் பாத்திமா ஆலயம் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா பாடல் பாடியவாறு வீதிகளில் பவனி வந்து ஆலயத்தை அடைந்தனர். அங்கு தவக்கால பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதேபோல் பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் பங்குத்தந்தை முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றி பவனி வந்தனர். இதைத்தொடர்ந்து வருகிற 9-ந் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


Next Story