புனித வெள்ளியையொட்டிதேவாலயங்களில் பெரிய சிலுவை பாதை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


புனித வெள்ளியையொட்டிதேவாலயங்களில் பெரிய சிலுவை பாதை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 April 2023 7:00 PM GMT (Updated: 7 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

புனித வெள்ளியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பெரிய சிலுவை பாதை பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனித வெள்ளி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலக மக்கள் யாவரையும் ரட்சிக்க வந்த இயேசு யுத மன்னன் பிலாத்துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு தலையில் முள் கிரீடம் அணிவித்து கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்.

இதனை நினைவு கூறும் வகையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் இந்த நாளை புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர்.

பெரிய சிலுவை பாதை

இந்த புனித வெள்ளி தினம் நேற்று கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டது- இதையொட்டி கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் பெரிய சிலுவை பாதை நடைபெற்றது.

பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற பெரிய சிலுவை பாதையின்போது, ஆலய வளாகத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் முன் இயேசு சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோல்களில் சிலுவையை சுமந்து தங்களை வருத்தி கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.

சிறப்பு பிரார்த்தனை

இந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல் கந்திகுப்பம், சுண்டம்பட்டி, எலத்தகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் பெரிய சிலுவைப்பாதை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


Next Story