செந்துறை அருகே புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி


செந்துறை அருகே புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 26 July 2023 2:45 AM IST (Updated: 26 July 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

திண்டுக்கல்

செந்துறை அருகே மங்கமனூத்துவில் புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 17-ந்தேதி சிலுவை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தினமும் ஆலயத்தில் நவநாள் திருப்பலி நடந்தது. கடந்த 23-ந்தேதி புனித சந்தியாகப்பரின் உருவம் பொறித்த கொடி ஊர்வலம் கொண்டுவரப்பட்டு, ஆலயத்தில் ஏற்றப்பட்டது. அதன்பிறகு நள்ளிரவு கபாலமாலை சப்பரபவனி நடந்தது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேர் பவனி நடைபெற்றது. இதையொட்டி அன்றைய தினம் காலை புதுநன்மை திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு தேர்பவனி நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் வாணவேடிக்கையுடன் 3 புனிதர்களின் தேர்பவனி தொடங்கியது. மங்கமனூத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேர் திருப்பியும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, வழிபாடு செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை மங்கமனூத்து திருத்தல பங்குத்தந்தை தாமஸ் ஜான்பீட்டர் மற்றும் அருட்சகோதரர்கள், ஊர்பெரியவர்கள், பங்கு இறைமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story