புனித மார்ட்டின் தேபோரஸ் ஆலய தேர்பவனி


ஆண்டிமடத்தில் புனித மார்ட்டின் தேபோரஸ் ஆலய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

அரியலூர்

புனித மார்ட்டின் தேபோரஸ்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் புனித மார்ட்டின் தேபோரஸ் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து, ஒவ்வொரு நாளும் நவநாள், திருப்பலி நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி ஜெயங்கொண்டம் மறைமாவட்ட அருள் தந்தை ரோச் அலெக்சாண்டர் ஆடம்பர கூட்டு பாடல் திருப்பலியை நடத்தி வைத்தார்.

தேர்பவனி

இதையடுத்து புனித மார்ட்டின் தேபோரஸ் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் வாண வேடிக்கையுடன் ஆலயத்திலிருந்து முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தில் வந்தடைந்தது. இதில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இறைப் பாடல்களை பாடி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

இதையடுத்து, நேற்று காலை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கூட்டு திருப்பலியை நடத்தி வைத்தார். பின்னர் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆண்டிமடம் பங்கு தந்தை மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story