மோகனூர் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க எதிர்ப்பு-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்


மோகனூர் பகுதியில் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க எதிர்ப்பு-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:46 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் தாலுகாவுக்குட்பட்ட வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலங்களை அளவீடு செய்து வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மே தின கிராம சபை கூட்டம் வளையப்பட்டி ஊராட்சி ரெட்டையாம்பட்டியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். சிப்காட் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்படுவதோடு, விவசாயமும் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் சார்பில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதியிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிப்காட் அமைக்கக்கூடாது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த முறை நடந்த கிராம சபை கூட்டத்தின் போது இதே தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என கூறிய நிலையில், நேற்று தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story