செங்குன்றம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


செங்குன்றம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

செங்குன்றம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் ஜீவா நகர், பாலாஜி கார்டன் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 3 மணியில் இருந்து இரவு வரை மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து அலமாதி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் நேற்று இரவு 8 மணியளவில் எடப்பாளையம் பகுதியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்வாரிய அதிகாரிகளும் அங்கு வந்து பேசினர். இதையடுத்து சுமார் அரைமணி நேரத்துக்கு பிறகு 8.30 மணி அளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் மின்வாரிய ஊழியர்கள், பழுதான டிரான்ஸ்பார்மரை சரி செய்தனர். இதையடுத்து சுமார் 7 மணி நேரத்துக்கு பிறகு இரவு 10 மணியளவில் மீண்டும் அந்த பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அலமாதி மின்வாரிய உதவி பொறியாளர் கோபிநாத் கூறும்போது, "மின்வாரிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றுவிட்டதால் பழுதான டிரான்ஸ்பார்மரை உடனடியாக பழுதுபார்க்க முடியவில்லை" என்றார்.

1 More update

Next Story