காஞ்சீபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் பொதுமக்கள்; சீரமைக்க கோரிக்கை


காஞ்சீபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் பொதுமக்கள்; சீரமைக்க கோரிக்கை
x

காஞ்சீபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு பகுதியில் உள்ளது முருகன் காலனி. இங்கு செல்வதற்கு அந்த பகுதியிலுள்ள வேகவதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கன மழையால் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த தரைப்பாலம் முழுவதுமாக சேதம் அடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

தொடர்ந்து வேகவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் முருகன் காலனி குடியிருப்புவாசிகள் வேறு வழியின்றி மாற்று வழியை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் இந்த தரைப்பாலமானது சீரமைக்கப்படாமலேயே உள்ளது.

சீரமைக்க கோரிக்கை

தற்போது வேகவதி ஆற்றில் எந்த வித நீரோட்டமும் இல்லாததால் சேதம் அடைந்து அடித்துச்செல்லப்பட்ட இந்த தரைப்பாலத்திலேயே ஆபத்தான முறையில் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும், கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்வோர், அந்த குடியிருப்புவாசிகள் என அனைத்து தரப்பினரும் கடந்து செல்கின்றனர்.

நீண்ட தூரம் சுற்றி வருவதற்கு பதிலாக சேதமடைந்த இந்த தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்னர் இந்த தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகன் காலனி குடியிருப்பு மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story