பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் பாதுகாப்பாக கையாள வேண்டும் -மேயர் வலியுறுத்தல்


பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் பாதுகாப்பாக கையாள வேண்டும் -மேயர் வலியுறுத்தல்
x

பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் பாதுகாப்புடன் கையாள வேண்டுமென மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் நேற்று, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் பட்டாசு கழிவுகளை அகற்றுவது மற்றும் தீ விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது:-

தீபாவளியை முன்னிட்டு 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு கழிவுகள் சேரும். பட்டாசு கழிவுகளை தனியாக அதற்கென வைக்கப்பட்டுள்ள பைகளில் சேகரித்து முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் கனரக வாகனங்களை ஒதுக்கிட வேண்டும். தினந்தோறும் பட்டாசு கழிவுகளை அன்றைய தினமே அப்புறப்படுத்திட வேண்டும். இந்த கழிவுகளை முறையாக கும்மிடிப்பூண்டியில் உள்ள நிலையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

பட்டாசு கழிவுகள்

பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் பாதுகாப்புடன் கையாள வேண்டும். பட்டாசு கழிவுகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்தும், அதை தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்குவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பணிகளை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். குப்பை கொட்டும் வாகனங்களில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தீயணைப்புத்துறையின் மூலம் தகுந்த பாதுகாப்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

இதேபோல, பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story