நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை ஆணையாளர் தாணுமலைமூர்த்தி முன்னிலை வகித்தார். நெல்லை மாநகராட்சி 37-வது வார்டு பாளையங்கோட்டை ஆச்சிமடம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, பயணிகள் நிழற்கூடம் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லை. குடிநீர் எப்போதாவது வந்தாலும் சாக்கடை கலந்து காணப்படுகிறது. எங்கள் வார்டில் குப்பைகளை அகற்றுவதற்கோ, கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்துவதற்கோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் தெருவிளக்குகள் முறையாக எரிவது இல்லை. எனவே மாநகராட்சி எங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நெல்லை கொக்கிரகுளம் இளங்கோ அடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி வீடுகளில் உள்ள கழிவுநீர் மாநகராட்சி குறிச்சி ரோட்டில் உள்ள கழிவுநீர் சாக்கடையில் கலந்து வருகிறது. இந்த நிலையில் அந்த ஓடையில் ஆக்கிரமிப்பு உள்ளதால் கழிவுநீர் வெளியே போகாமல் வீட்டுக்குள் வந்து விடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அந்த ஓடையை சரிசெய்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
51-வது வார்டு கவுன்சிலர் சகாய ஜூலியட் மேரி மற்றும் டக்கரம்மாள்புரம் மக்கள் நலச்சங்க தலைவர் ஜான்சன், துணைத் தலைவர் ஞானராஜ், செயலாளர் சாமுவேல் அற்புதராஜ் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், டக்கரம்மாள்புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்களில் டவுன் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே பஸ்நிறுத்தங்களில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தார்சாலை அமைத்துத்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.