பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே கே.கே.நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

அடிப்படை வசதிகள்

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி கே.கே.நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் மேயர் சுஜாதா ஆகியோர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து ரூ.6½ கோடி நிதி ஒதுக்கப்பட்டு அங்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் கே.கே.நகர் பாரதியார் தெருவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று கோரிக்கை மனு அளிக்க மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். மேயர் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கும்படி அலுவலர்கள் கூறினர்.

சாலை மறியல்

ஆனால் பொதுமக்கள் மனுவை மேயரிடம் கொடுப்பதாக கூறி அங்கு காத்திருந்தனர். சிறிதுநேரம் காத்திருந்த பொதுமக்கள் திடீரென மாநகராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த வேலூர் தெற்கு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். அவர்கள் மேயர் சுஜாதா மற்றும் கமிஷனர் ரத்தினசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதியளித்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கே.கே.நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் நாங்கள் வசிக்கும் 2 தெருக்களில் சாலை, கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளித்தோம் என்றனர்.


Next Story