மீனவ பட்டதாரி இளைஞர்கள் குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்


மீனவ பட்டதாரி இளைஞர்கள் குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
x

மீனவ பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

பயிற்சி மையம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்ள பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

விண்ணப்ப படிவம்

இந்த திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது காஞ்சீபுரம் நீலாங்கரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

கடைசி நாள்

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் காஞ்சீபுரம் நீலாங்கரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story