சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு: கட்டணமில்லா பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு 13-ந்தேதி நடக்கிறது - தமிழக அரசு தகவல்


சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு: கட்டணமில்லா பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு 13-ந்தேதி நடக்கிறது - தமிழக அரசு தகவல்
x

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழகத்தை சேர்ந்த இளநிலை - முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோவை, மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு சிவில் சர்வீசஸ் பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பதாரர்களிடம் இருந்து இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்வுக்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு 7,077 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2023-ம் ஆண்டு மே 28-ந்தேதி நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத்தேர்வு, தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை www.civilservicecoaching.com என்ற பயிற்சி மைய இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும். தேர்வு காலை 10.30 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை பெற பயிற்சி மைய இணையதளத்திலும், 044-24621475, 94442 86657 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story