சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்


சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x

சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

குன்றத்தூரில் இருந்து பல்லாவரம் செல்லும் சாலை விரிவாக்க பணிக்காக குன்றத்தூர் அடுத்த கரைமா நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று சாலை ஆக்கிரப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் வந்திருந்தனர்.

ஏற்கனவே ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அன்றைய தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சென்று விட்டனர். இதனால் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கரைமாநகர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை சிறை பிடித்து பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரி மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டுமனை புதிதாக விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ளது. அதனை விற்பனை செய்வதற்காக இங்குள்ள குடியிருப்புகள், கடைகள் அகற்றப்படுவதாக குற்றம் சாட்டினர். ஆனால் சாலை விரிவாக்க பணிக்காக முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story