பேரிடர் காலங்களில் பொதுமக்கள்பாதுகாப்பாக இருப்பது எப்படி?


பேரிடர் காலங்களில் பொதுமக்கள்பாதுகாப்பாக இருப்பது எப்படி?
x

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

6 தீயணைப்பு நிலைய வீரர்கள்

பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையின் அலுவலர் அம்பிகா தலைமையில், பெரம்பலூர், வேப்பூர், அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, துறையூர் ஆகிய 6 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்தும், பேரிடர் தகவல்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்தும், தீயணைப்பு நியைங்களின் தொலைபேசி, செல்போன் எண்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்ய வேண்டியவை...

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை மழைக்காலத்தின் போது கொதிக்க வைத்த குடிநீரை அருந்த வேண்டும். தீ விபத்து மற்றும் இடி, மின்னலின் போது மின் சாதனப்பொருட்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். இடி மின்னலின் போது வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். முடிந்த வரை பயணங்களை தவிர்க்க வேண்டும். நிலநடுக்கம் அறிகுறி தெரிந்தவுடன் வீட்டிற்கு வெளியே திறந்த பகுதிக்கு செல்ல வேண்டும். மின் தடையின் போது பயன்படுத்தும் வண்ணம் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் போன்றவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். முக்கிய ஆவணங்களை எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாத வகையில் பாதுகாப்பான உறையில் வைத்து கொள்ள வேண்டும். வானிலை நிலவரம் மற்றும் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே துல்லியமாக அறிந்திடவும் இடர்பாடுகளில் இருந்து தற்காத்து கொள்ளவும் TNSMART என்கிற தமிழக அரசின் செயலியை பிளே ஸ்டோர் வழியாக செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மின்னல் வருவதை முன் கூட்டியே தெரிந்து கொள்ள இந்திய வானிலை மையத்தின் DMINI என்கிற செயலியை பிளே ஸ்டோர் வழியாக செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

செய்யக் கூடாதவை...

பேரிடா் காலங்கள் பொதுமக்கள் செய்யக் கூடாதவை வெள்ள நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இடி மின்னலின் போது கால்நடைகளை மரத்திற்கு அடியில் நிற்க வைக்க கூடாது. இடி மின்னல் தாக்கத்தின் போது மரங்களின் மீது மின்சாரம் பாயும் என்பதால் மரங்களுக்கு அடியில் நிற்க கூடாது. பழுதடைந்த கட்டங்களின் உள்ளே செல்ல வேண்டாம். இடி மின்னலின் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம். அதிகாரப்பூர்வ மற்ற செய்திகளை நம்ப வேண்டாம். பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அருகே செல்ல வேண்டாம். மின் உபகரணங்களை ஈர கையினால் தொட வேண்டாம். இரும்பு பாலங்கள் மற்றும் செல்போன் கோபுரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம்.


Next Story