போலீஸ் ஸ்டேஷன் முன்பு கோஷ்டி மோதல்


போலீஸ் ஸ்டேஷன் முன்பு கோஷ்டி மோதல்
x
தினத்தந்தி 20 Jun 2023 8:13 PM GMT (Updated: 21 Jun 2023 10:41 AM GMT)

ஆட்டையாம்பட்டியில் போலீஸ் நிலையம் முன்பு நடந்த கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

பனமரத்துப்பட்டி:-

ஆட்டையாம்பட்டியில் போலீஸ் நிலையம் முன்பு நடந்த கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுபோதையில் தகராறு

சேலம் ஆட்டையாம்பட்டி அருகே மாமூண்டி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அருணாசலம் மகன் சக்திவேல் (வயது 29). மளிகை கடை வைத்துள்ளார். இவரும், இவரது நண்பர்களும் காளிப்பட்டி பகுதியில் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அதே பகுதியில் ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த முனுசாமி மகன் நவின்குமார் (27) என்பவரும் தனது நண்பர்களுடன் வந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது இருதரப்பினருக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் நிலையம் முன்பு மோதல்

சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர். போலீஸ் நிலையம் முன்பு இரு தரப்பினரும் திரண்டு இருந்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது போதையில் இருந்த 2 பேர் அங்கேயே மயங்கி விழுந்தனர். அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த களேபரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். சமாதானப்படுத்த வந்த போலீசாரையும் அந்த கோஷ்டியினர் கீழே தள்ளினர். அப்படி இருந்து போலீசார் ஒருவழியாக அவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். மயங்கி கிடந்தவர்கள் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து வீட்டுக்கு சென்றனர். இந்த மோதலில் சமாதானம் செய்ய வந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அந்த தாக்குதலில் அவரது மண்டை உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

வீடியோ வைரலானது

இந்த போர்க்கள காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் இரு தரப்பை சேர்ந்த நவீன்குமார், சத்தியராஜ், ராஜ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த மோதல் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story