நடுக்கடலில் வெடிகுண்டு வீசி மீனவர்கள் மோதல் - 32 பேர் மீது வழக்குப் பதிவு
நடுக்கடலில் வெடிகுண்டு வீசி மீனவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
ராதாபுரம்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இடிந்தகரை கடல் பகுதியில் இருந்து சுமார் இரண்டரை நாட்டிகல் தொலைவில் உள்ள கடலோரப்பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள், சாதாரண வலைகளை விரித்து வைத்திருந்தனர். கடந்த 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த சமாதானராஜ் தலைமையில் விசைப்படகு மீனவர்கள் 12 பேர், 5 விசைப்படகுகளில் விதிமுறைகளை மீறி வந்து மீன் பிடித்தனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள், விசைப்படகுகளால் கிழிந்து சேதமடைந்ததாகத் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்து இடிந்தகரை நாட்டுப்படகு மீனவர்கள் 37 பேர் 12 படகுகளில் கடலுக்கு சென்று விசைப்படகு மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் குறித்து மீனவர்கள் காவல்துறையினரிடமும், கூடங்குளம் கடலோர காவல் படையினரிடமும் புகார் அளித்தனர். இதையடுத்து கூடங்குளம் கடலோர காவல் படை போலீசார் நாட்டு படகு மீனவர்கள் 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதே போல் இடிந்தகரை மீனவர்களும், கன்னியாகுமரி மீனவர்கள் மீது புகார் மனு அளித்தனர். அதன் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.