மாநில அரசுடன் மோதல் போக்கு: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்...!


மாநில அரசுடன் மோதல் போக்கு: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்...!
x

தமிழ்நாடு அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு அரசுக்கும் கவர்னர் ரவிக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று கூறி கவர்னர் ரவி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதேபோல், 2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது.

அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள 65வது பத்தியை கவர்னர் ஆர்.என். ரவி வாசிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா' என்ற வார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் அந்த வார்த்தைகளை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்தார்.

மேலும், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை தாண்டி கவர்னர் மேலும் சில கருத்துக்களை கூறினார். இதனால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், கூட்டம் நிறைவடையும் முன்னரே, தேசிய கீதம் இசைக்கும் முன்னரே அவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறிவிட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சி தொடர்பாக வெளியான அழைப்பிதலில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய குடிமை பணி நேர்முகத்தேவை எதிர்கொள்ள மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.

இதில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, குடிமையியல் (ஐஏஸ், ஐபிஎஸ்) பணியாளர்கள் மத்திய அரசு பக்கம் தான் நிற்க வேண்டும். மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் பேச வேண்டும்' என்று கூறினார். இந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர்ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று சந்தித்தனர்.

தமிழ்நாடு அரசுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். காலை 11.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்ல இருப்பதாகவும், இந்த பயணத்தின்போது தமிழ்நாடு சட்டசபை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அல்லது ஜனாதிபதியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story