செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை


செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் தற்கொலை
x

செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம்

10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 40). தச்சுத்தொழிலாளி. இவருடைய மகன்கள் தினேஷ்குமார் (16), நவீன்குமார் (14). இவர்களில் நவீன்குமார், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சுந்தரின் மனைவி மற்றும் தினேஷ்குமார் வெளியே சென்று விட்டனர். நவீன்குமார் வீட்டில் எப்போதும் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் வழக்கம்போல் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதனை சுந்தர் கண்டித்து விட்டு வெளியே சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த நவீன்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தையும் தற்கொலை

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்த சுந்தர், தனது மகன் நவீன்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனின் உடலை பார்த்து சுந்தர் கதறி அழுதார். சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் நவீன்குமார் உடலை கீழே இறக்கி விட்டு, குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் சுந்தருக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஆனாலும் தான் கண்டித்ததால்தான் தனது மகன் தற்கொலை செய்து கொண்டான் என விரக்தி அடைந்த சுந்தர், திடீரென கத்தியால் தனது கையை அறுத்துக்கொண்டார். பின்னர் தனது மகன் தற்கொலை செய்து கொண்ட அறைக்குள் சென்று அதே தூக்கு கயிற்றில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே நாளில் தந்தை-மகன் இருவரும் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்து வந்த குன்றத்தூர் போலீசார், தற்கொலை செய்த தந்தை-மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தந்ைத கண்டித்ததால் மகனும், தன்னால்தான் மகன் இறந்ததாக நினைத்து தந்தையும் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story