அரசு பள்ளியின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி படுகாயம்: போலீசார் விசாரணை


அரசு பள்ளியின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி படுகாயம்: போலீசார் விசாரணை
x

லாலாபேட்டை அரசு பள்ளியின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர்

10-ம் வகுப்பு மாணவி

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், கள்ளப்பள்ளி ஊராட்சி கொடிக்கால் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகள் மதுஸ்ரீ (வயது 15) என்பவரும் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு சத்து குறைவால் அடிக்கடி மயக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் மதுஸ்ரீ தனது பெற்றோருடன் கலந்து கொண்டார்.

படுகாயம்

பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் முதல் மாடியில் உள்ள தனது வகுப்பறைக்கு மதுஸ்ரீ சென்றார். பின்னர் வகுப்பறையின் முன்பு உள்ள வராண்டாவில் நின்று கொண்டு சகமாணவிகளுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மதுஸ்ரீ திடீரென பள்ளியின் முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மதுஸ்ரீயின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, வருவாய் ஆய்வாளர் நசீமாபானு மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவி கீழே விழுந்த இடத்தை பார்வையிட்டனர்.

மேலும் அங்கிருந்த சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story