நாளை பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில்கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி
வெப்படை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் இறந்தான். நாளை (வியாழக்கிழமை) பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
பள்ளிபாளையம்
10-ம் வகுப்பு மாணவன்
பள்ளிபாளையம் அடுத்த வெப்படை அருகே உள்ள கள்ளுக்கட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மகன் கவின் (15). இவன் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம்போல் கவின் பள்ளிக்கு சென்றான். பின்னர் மாலை பள்ளி முடிந்ததும் அவனும், நண்பர்கள் 2 பேருடன் அல்லிநாயக்கன்பாளையம் வந்தனர். அங்குள்ள கல்குவாரியில் உள்ள நீரில் குளித்தனர்.
குளிக்கும் போது ஆழமான இடத்திற்கு கவின் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவன் கவின் திடீரென குட்டையில் மூழ்கியதாக தெரிகிறது. இதைப்பார்த்த நண்பர்கள் கவினை தேடி உள்ளனர். அவன் கிடைக்காததால் வீட்டுக்கு சென்று கவினின் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த கவினின் பெற்றோர் கல்குவாரி குட்டைக்கு சென்று அவனை தேடி உள்ளனர்.
குட்டையில் மூழ்கி பலி
இதுகுறித்து வெப்படை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் கல்குவாரி குட்டையில் மாணவனை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு மாணவன் உடலை மீட்டனர்.
பின்னர் போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெப்படை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கல்குவாரி குட்டையில் மூழ்கி நாளை (வியாழக்கிழமை) பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.