கொடைக்கானல் ஏரியில் தூய்மை பணி
உலக சுற்றுலா தினத்தையொட்டி கொடைக்கானல் ஏரியில் தூய்மை பணியை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
உலக சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலாத்துறை சார்பில் தூய்மை பணி தொடக்க விழா கொடைக்கானல் காந்தி சிலை அருகே நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கி, கொடி அசைத்து தூய்மை பணியை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் மாயக்கண்ணன், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, சுகாதார ஆய்வாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், சுற்றுலா வழிகாட்டி சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் கொடைக்கானல் ஏரியை சுற்றி தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மேலும் சமூக நலத்துறை மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் ஒரு நாள் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல் 'சுற்றுலா தின விழா' என்பதை கருப்பொருளாக கொண்டு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் மூலம் பரிசுகள் வழங்கப்படும் என்று உதவி சுற்றுலா அலுவலர் தெரிவித்தார்.