தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
கோத்தகிரியில் தூய்மை பணியாளர்கள் குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி, மே.31-
கோத்தகிரியில் தூய்மை பணியாளர்கள் குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்த போராட்டம்
கோத்தகிரி பேரூராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 28 பேர், தற்காலிக தூய்மை பணியாளர்கள் 53 பேர் என மொத்தம் 81 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே பேரூராட்சி கவுன்சிலரின் கணவர், பெண் தூய்மை பணியாளர்களை சமூக வலைதளம் மூலம் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பெண் பணியாளர்களுக்கு அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது செயலை கண்டித்தும் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர்.
அவர்கள் பணிக்கு செல்லாமல், கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் வந்தவுடன் கலந்து ஆலோசனை செய்து பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று கவுன்சிலர்கள் கூறினர். இதற்கு சமரசம் அடையாத பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். உடனடியாக செயல் அலுவலர் மணிகண்டன், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தூய்மை பணி பாதிப்பு
அப்போது தூய்மை பணியாளர்கள் கவுன்சிலரின் கணவர், தனது மனைவியின் பதவியை வைத்து, அதிகாரம் செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் தூய்மை பணியாளர்கள் குறித்து தவறான கருத்து பதிவிட்டு, அவதூறு பரப்பி வருகிறார். இந்த செயல் தூய்மை பணியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களது புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து பணியாளர்கள் போராட்டத்தைத் கைவிட்டு பணிக்கு சென்றனர்.
தூய்மைப் பணியாளர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வீடுதோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. மேலும் பணியாளர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.