குளங்களில் தூய்மைப் பணி
விழுப்புரம் நகரில் குளங்களில் தூய்மைப் பணியை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
விழுப்புரம்:
தமிழக முதல்-அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் அறிவிப்பில் சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் வகையில் அனைத்து உள்ளாட்சிகளிலும் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டு இப்பணிகளை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
இதன் அடிப்படையில் விழுப்புரம் நகராட்சியில் விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் பின்புறமுள்ள அய்யனார் குளம், கே.கே.சாலை கன்னியம்மன் கோவில் அருகில் உள்ள கன்னியாகுளம் ஆகிய நீர்நிலைகளின் தூய்மைப்பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்திக்அலி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா அனைவரையும் வரவேற்றார். முகாமில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு அய்யனார் குளம், கன்னியாகுளங்களில் தூய்மைப்பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஆஞ்சநேயர் கோவில் பரம்பரை அறங்காவலர் குமார் மற்றும் அனைத்து தன்னார்வலர்கள், பள்ளி- கல்லூரி தேசிய மாணவர் இயக்கத்தினர், தேசிய பசுமை இயக்க தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டு தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.