ஏற்காட்டில் தொடர் மழை:கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறதுசுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஏற்காட்டில் தொடர் மழையால் கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்
ஏற்காட்டில் தொடர் மழையால் கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்காட்டில் தொடர் மழை
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்படும். அங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காணப்பட்டது.இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஏற்காட்டில் மழை பெய்தது. அதாவது அங்கு 11.20 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. நேற்று விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருந்தது.
இவர்கள் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, சேர்வராயன் குகை கோவில், பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். படகு இல்லத்தில் பயணிகள் கூட்டத்தால் நீண்ட வரிசை காணப்பட்டது.
தண்ணீர் கொட்டுகிறது
கடந்த சில மாதங்களாக கிளியூர் நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. தற்போது தொடர் மழை பெய்ததால் அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு அதிகளவில் செல்கின்றனர். தண்ணீர் கொட்டுவதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களில் சிலர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. மாவட்டத்தில் கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, எடப்பாடி, ஓமலூர் ஆகிய பகுதிகளிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது.