பாதாள சாக்கடை திட்ட குழிகளில் அடைப்பு


பாதாள சாக்கடை திட்ட குழிகளில் அடைப்பு
x

சாலை அமைக்கும் போது ஜல்லி உள்ளிட்ட கழிவுகளை கொட்டியதால் பாதாள சாக்கடை திட்ட குழிகளில் அடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நவீன எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

சாலை அமைக்கும் போது ஜல்லி உள்ளிட்ட கழிவுகளை கொட்டியதால் பாதாள சாக்கடை திட்ட குழிகளில் அடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நவீன எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது.

சாலையில் ஓடிய கழிவுநீர்

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ரூ.170 கோடியே 22 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 7,400 ஆள்இறங்கு குழிகளும், 18 கழிவு நீரேற்று நிலையங்களும், 3 கழிவுநீர் உந்து நிலையங்களும், 17.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீர்உந்து குழாய்களும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாட்டு சந்தை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் கட்டப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வீட்டு இணைப்பு கொடுத்த வீடுகளில் இருந்து கழிவுநீர் குழாய் வழியாக செல்கிறது. இதற்கிடையில் குப்பைகள், ஜல்லி, தார் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு, ஆள்இறங்கு குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது. இந்த நிலையில் ராஜாமில் ரோட்டில் நேற்று நவீன எந்திரம் மூலம் ஆள்இறங்கு குழிகளை தூர்வாரும் பணி நேற்று மும்முரமாக நடைபெற்றது. இதன் காரணமாக ராஜா மில் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

நவீன எந்திரம்

பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்து, தற்போது கால்வாய்கள் வழியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. இதற்கிடையில் திட்ட பணிகள் முடிந்த பகுதிகளில் சாலை அமைக்கப்படுகிறது. அப்போது ஜல்லி, தார் போன்ற கழிவுகளை ஆள்இறங்கு குழிகளுக்குள் தள்ளி விட்டு சென்று உள்ளனர்.

ராஜாமில் ரோட்டில் ஆள்இறங்கு குழியை தூர்வாரிய போது ஜல்லி, தார் கழிவுகள் வெளியேற்றப்பட்டன. இதேபோன்று பல்வேறு இடங்களில் கழிவுகளை குழிகளில் கொட்டி உள்ளனர். இதன் காரணமாக அடைப்பு ஏற்படுகிறது. குழிகளில் ஆட்கள் இறங்குவதை தடுக்க நவீன எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story