கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க வேலூர் மண்டலம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில பொருளாளர் சேகர் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் ஆனந்தன், வேலூர் மாவட்ட தலைவர் லால்பகதூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர்கள் சங்கர், வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுப்பணி நிலைத்திறனில் உள்ள குளறுபடிகளை உடனடியாக தீர்க்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய உயர்வு கமிட்டி அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story